மாயமான மாணவியை கண்டுபிடித்து தரவில்லை என போலீசாரை கண்டித்து சாலை மறியல்
மாயமான மாணவியை கண்டுபிடித்து தரவில்லை என போலீசாரை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
கல்லூரி மாணவி மாயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் செல்வகுமாரி(வயது 20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கல்லூரியில் விசாரித்தபோது அவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வகுமாரியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
இந்நிலையில் புகார் செய்து 5 நாட்களாகியும் இதுவரை செல்வகுமாரியை கண்டுபிடித்து தராததால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ேநற்று இரவு அப்பகுதியில் ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது மகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தும், போலீசார் அலட்சியமாக உள்ளனர்.
மேலும் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் நிலம் வாங்குவதற்காக கடன் வாங்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. இதனால் பணம், நகையுடன் சென்ற எங்களது மகள் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் தவித்து வருகிறோம், என்று செல்வகுமாரியின் பெற்றோர் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் புண்ணியக்கோடி உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் செல்வகுமாரியை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் இருபுறமும் வாகனங்கள் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் வந்த ஒரு தம்பதியை, மறியலில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.