மாணவ-மாணவிகள் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே ஆபத்தான பள்ளி கட்டித்தை இடித்து அகற்ற வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே ஆபத்தான பள்ளி கட்டித்தை இடித்து அகற்ற வலியுறுத்தி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிக்குண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் பயத்துடனே வந்து சென்றனர். தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மாணவ-மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் உசிலம்பட்டி-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள அல்லிகுண்டம் விலக்கு பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்ததும் சேடபட்டி போலீசார், ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் நேரில் வந்து மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை மாணவ-மாணவிகள் கைவிட்டனர்.
இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பெற்றோர் கூறும் போது:-
தற்போது இயங்கி வரும் பள்ளியில் மேற்கூரையில் போடப்பட்ட ஓடுகள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது. இதனால் மழைநீர் தேங்கி பள்ளியின் மேல் பகுதியில் ஆங்காங்கே இடிந்து விழுந்து வருகிறது, இதனால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் நலம் கருதி இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தையும் மாற்ற வேண்டும். அதேபோல் இடிக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் விரைவில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்றனர்.