கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 18:48 GMT

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை அடுத்த மாவிலங்கை கிராமத்ைத மாணவ, மாணவிகள் செட்டிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு மாவிலங்கை கிராமத்தில் இருந்து வந்து பஸ்சில் செல்கின்றனர்.

இந்த நிலையில் பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி மாணவ, மாணவிகள் மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை எதுமலையில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மறித்து சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கூடுதல் பஸ்

சுமார் 1½ மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மேலாளர் ராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மாவிலங்கை கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வாரத்திற்குள் கூடுதல் பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்