மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 254 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 254 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசும், வாரியமும் அறிவித்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரித்திட வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கையை அனுப்புவதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வுக்கண்டிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் நடந்தது.
254 பேர் கைது
பின்னர் அவர்கள் மின்வாரிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட தலைவர் பீர் முகமதுஷா, மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாநில செயலாளர் வன்னமுத்து, மாவட்ட பொருளாளர் நாகையன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 254 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.