கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

மணல்மேடு அருகே கூடுதல் பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-21 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேரூராட்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, கடலங்குடி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் காலையில் கல்லூரி வருவதற்கும், கல்லூரி முடிந்து மாலை வீடு செல்வதற்கும் போதிய பஸ் வசதி இல்லாததால் கிடைக்கிற பஸ்சில் ஏறி கூட்ட நெரிசலில் நின்றும், படிக்கட்டில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

சாலை மறியல்

இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கல்லூரி தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால், இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை 10 மணி அளவில் மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டு மணல்மேடு வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராமமூர்த்தி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் தரப்பில் கல்லூரி வருவதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதற்கு கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர். இந்த சாலை போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்