தேனி அருகே ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் பூதிப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-23 21:00 GMT

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் பூதிப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தேனியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் குறிப்பாக ஆதிபட்டியில் இருந்து பூதிப்புரம் வரை பல்வேறு இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பூதிப்புரம், ஆதிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டங்களும் நடந்தன. இதையடுத்து இந்த சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது. ஆனாலும், சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் தேனி-பூதிப்புரம் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி விலக்கில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். பின்னர் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் தேனி-பூதிப்புரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கூறும்போது, "பூதிப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன. அத்துடன் அரசு பஸ், மினி பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. சேதம் அடைந்த சாலையால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. டெண்டர் விடப்பட்ட போதிலும் பணிகளை தொடங்க தாமதம் செய்கின்றனர். எனவே சாலை சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு சாலையை சீரமைக்கும் பணியை முடிக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்