புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது

ஜல்லிக்கட்டு பதாகையை கிழித்தவர் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-30 18:08 GMT

புதுக்கோட்டை:

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஒரு சமுதாயத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையை மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி சம்பவத்தன்று வாராப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த சமுதாயத்தை சேர்ந்த அமைப்பினர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ரவுண்டானாவை சுற்றி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது.

90 பேர் கைது

இந்த மறியல் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அங்குள்ள போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு கால அவகாசம் கொடுக்கும்படியும், தற்போது மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் 31 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்