நத்தம் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி சாலை மறியல்

நத்தம் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-13 17:01 GMT

நத்தம் அருகே நடுவனூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 190 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பள்ளி வகுப்பறைக்குள் வருகின்றன. அதேபோல் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தால் மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து வருகிறது.

மேலும் பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும், குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நடுவனூர் பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் இன்று நத்தம்-சிறுகுடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி, பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் நத்தம்-சிறுகுடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்