கல்லூரி பஸ் மோதியதில் உடல் நசுங்கி பெண் பலி

ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றபோது தஞ்சையில், கல்லூரி பஸ் மோதியதில் உடல் நசுங்கி பெண் பலியானார். கணவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2022-10-18 20:23 GMT

தஞ்சாவூர்;

ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றபோது தஞ்சையில், கல்லூரி பஸ் மோதியதில் உடல் நசுங்கி பெண் பலியானார். கணவர் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க...

தஞ்சையை அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன். இவர், அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 59). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதற்காக அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு வந்து மாத்திரைகளை வாங்கிச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்குவதற்காக கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நடுக்காவேரியில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்டு வந்தனர்.

உடல் நசுங்கி பலி

தஞ்சை பெரியகோவில் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறி ஜெயலட்சுமி கீழே விழுந்தார். அவர் மீது கல்லூரி பஸ் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பலியானார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கண்முன்னே....

இது குறித்து கமலநாதன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை நகர போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தனது கண்முன்னே மனைவி உடல் நசுங்கி பலியானதை பார்த்த கமலநாதன் கதறி அழுத காட்சி பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்