வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட்-பிடமனேரி இடையே மண் மேடாக மாறிய தார்சாலை

Update: 2022-10-27 18:45 GMT

தர்மபுரி:

வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட்- பிடமனேரி இடையே மண்மேடு போல் மாறிய தார் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மண்மேடு போல் மாறிய தார்சாலை

தர்மபுரி ரெயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதி மற்றும் பிடமனேரி பகுதி ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுமார் 2 கி.மீ. நீளம் கொண்ட இந்த தார்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. இந்தநிலையில் இந்த சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியது.

இந்த சாலை மீண்டும் சீரமைக்கப்படாததால் முழுமையாக சேதம் அடைந்து மண்மேடு போல் மாறிவிட்டது. இதனால் இந்த சாலையில் அதிக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் சில மடங்கு அதிகரித்துள்ளது. வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட்- பிடமனேரி இணைப்பு சாலை சீரமைக்கப்படாததால் தர்மபுரி ரெயில் நிலைய சாலை, நேதாஜி பைபாஸ் சாலை ஆகியவற்றில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை மாலை நேரங்களில் தர்மபுரி நகர பகுதிக்கு வருவோரும், தர்மபுரி நகர பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்வோரும் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள், பல்வேறு அலுவலக பணிகளுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதேபோல் தர்மபுரி ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் சரக்கு ரெயில்களில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்ல வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதிக்கு வரும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்த இணைப்பு சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்