பாலக்கோடு பகுதியில் ஆமை வேகத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி-வேகம் எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-10-25 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி வேகம் எடுக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் ஒன்றாக இருப்பது பாலக்கோடு பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பேரூராட்சி பகுதியில் சுமார் 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. பாலக்கோடு பேரூராட்சி பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் மற்றும் பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளில் வழங்கப்படும் குடிநீரை சமமான அளவில் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுமார் 2 ஆயிரத்து 600 வீடுகளுக்கு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்து மீட்டர் பொருத்தி சீராக குடிநீர் வழங்குவதற்கான திட்ட பணிகள் ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக புதிய குடிநீர் குழாய்களை அமைக்க பாலக்கோடு பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் குழாய்கள் பதித்து வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு அளிக்கும் பணி 80 சதவீத அளவில் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிரமத்திற்கு உள்ளாகும் பொதுமக்கள்

வீடுகளுக்கு 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய பின் குடிநீர் குழாய்களில் செல்லும் நீரின் அழுத்தத்தை பரிசோதனை செய்து குழாய்களில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த புதிய குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தநிலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்ட பின் அதன் மேல் பகுதியில் உள்ள சாலை முறையாக சீரமைக்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலைகள் சமதளமின்றி காணப்படுகின்றன. மழைக்காலங்களில் இந்த சாலை பகுதி சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இந்த சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பாலக்கோடு நகர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் வேகம் எடுக்குமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுகாதார பாதிப்பு

பாலக்கோட்டை சேர்ந்த தமிழரசன்:

பாலக்கோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் தோண்டப்பட்டன. குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணி செய்யப்படாததால் பல இடங்களில் சாலையில் ஒரு பகுதி சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் முதியவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதை கருத்தில் கொண்டு சாலை சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

சமூக ஆர்வலர் முஸ்தாக்:

பாலக்கோடு நகர பகுதியில் சாலைகள் மற்றும் வீதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. இந்த பகுதிகளை சமன் செய்து அங்கு சாலை மீண்டும் சீரமைக்கப்படாததால் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் நடக்கிறது. இதேபோல் அந்த பகுதிகளில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது புழுதி பறப்பதால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே சாலைகள் மற்றும் வீதிகளில் சீரமைப்பு பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும்.

விரைவாக முடிக்க வேண்டும்

பாலக்கோட்டை சேர்ந்த கிருத்திகா:

பாலக்கோடு நகர பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குடியிருப்பு பகுதி சாலைகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பகுதிகள் மழை பெய்யும் நேரங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன. இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளும் ஆங்காங்கே சேதம் அடைந்து இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே நிலுவையில் உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்