ஆத்தங்குடி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

காரைக்குடி அருகே சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் ஆத்தங்குடி சாலையை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் ஆத்தங்குடி சாலையை விரிவாக்கம் செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலாத்தலம்

காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி. இங்கு பிரமாண்ட பங்களா வீடுகள் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இந்த பங்களாக்களை பார்த்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் கம்பெனிகளும், மரக்கடைகளும் உள்ளதால் இந்த பகுதி சுற்றுலா தலமாகவும், படப்பிடிப்பு தளமாகவும், தொழில் வளமிக்க பகுதியாகவும் இருந்து வருகிறது.

இதையடுத்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆத்தங்குடி சாலையில் இருந்து பலவான்குடி வழியாக குன்றக்குடிக்கும், காரைக்குடிக்கும், தி.சூரக்குடி வழியாக திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலைக்கும் ஏராளமான கார்கள், கனரக வாகனம், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

விபத்துகள்

இந்நிலையில் ஆத்தங்குடியில் இருந்து பலவான்குடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலைகள் இருபுறமும் பெயர்ந்து குறுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் தவறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் இங்குள்ள டைல்ஸ் கம்பெனிகளுக்கு டைல்ஸ் கற்களை ஏற்றி செல்ல வரும் கனரக வாகனங்களும் இந்த சாலையில் சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றன.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் தரப்பில் கூறியதாவது:- பெத்ராஜ் (டைல்ஸ் கடை உரிமையாளர்):- புகழ்பெற்ற இந்த ஆத்தங்குடி கிராமத்திற்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. மேலும் இந்த சாலை வழியாக பள்ளி பஸ்களும், மாணவர்கள், தினசரி கூலி தொழிலாளர்களும் சென்று வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக சாலையின் இருபுறத்தில் சேதமடைந்தும், சில இடங்களில் குண்டும், குழியுமாகவும் உள்ளதால் இரவு நேரங்களில் பல்வேறு விபத்து சம்பவம் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர இங்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை விரிவாக்கம் செய்து விரைவில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.

புதிய சாலை

சண்முகம்(தொழிலாளி):- தினந்தோறும் இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அவசர கால சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செல்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே வந்தால் கூட இந்த மோசமான சாலையால் வேகமாக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிரமமான நிலை உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் இங்குள்ள டைல்ஸ் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக அருகில் உள்ள கடியாபட்டி, நேமம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர். குண்டும், குழியுமான சாலையில் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்