வேப்பனப்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 'பல்லாங்குழி சாலைகள்': புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-21 18:45 GMT

தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி. இதன் வழியாக கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பிரதான சாலைகள் செல்கின்றன.

'பல்லாங்குழி' சாலைகளாக

இந்த பிரதான சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், பிற மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.

வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து 'பல்லாங்குழி' சாலைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

விரிவாக்கம் செய்யப்படவில்லை

மேலும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் இந்த நெருக்கடியான சாலையால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, தொடர் விபத்துகளும் நடக்கின்றன.

குப்பத்தில் இருந்து வேப்பனப்பள்ளிக்கு வரும் சாலையில் ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் அந்த மாநில அரசு பிரதான சாலையை விரிவுபடுத்தி உள்ளது.

அதே நேரத்தில் தமிழக எல்லையில் இருந்து வேப்பனப்பள்ளிக்கு வரும் 2 கிலோ மீட்டர் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக, ஒருவழி சாலையாக உள்ள வேப்பனப்பள்ளி-குப்பம் பிரதான சாலையை, உடனடியாக சீரமைத்து, சாலையை விரிவுபடுத்தி, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பதே வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்