சாலையில் ஆறாய் ஓடிய தண்ணீர்
மயிலாடும்பாறை பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையினால் சாலையில், ஆறாய் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு
மயிலாடும்பாறை-மூலக்கடை சாலையின் இடையே சிறு ஓடை அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த ஓடையில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த சமயத்தில், மயிலாடும்பாறை சாலை வழியாக மழைநீர் சென்று சுக்கான் ஓடையை சென்றடையும்.
எனவே ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில் மயிலாடும்பாறை-மூலக்கடை இடையே போக்குவரத்து தடைபடும். இதனை தடுக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மயிலாடும்பாறை சாலையோரத்தில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. அதன் பின்னர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையோரமாக மழை நீர் சென்றது.
சாலையில் ஓடிய தண்ணீர்
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் சிலர் தடுப்பணையில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் மழைநீர் மீண்டும் சாலை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே மூலக்கடை பகுதியில், சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சிறு ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டிருந்த காரணத்தால், தண்ணீர் சாலையில் ஆறாய் கரைபுரண்டு ஓடியது.
இதன் காரணமாக மயிலாடும்பாறை-மூலக்கடை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் குறையும் வரை வாகன ஓட்டிகள் மழையில் காத்திருந்தனர். தண்ணீர் வடிந்த பிறகே தங்களது வாகனங்களில் சென்றனர். எனவே தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.