ரூ.25½ கோடியில் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையை பலப்படுத்தும் பணிகள்

அளக்குடி கிராமத்தில் ரூ.25½ கோடியில் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையை பலப்படுத்தும் பணிகள் குறித்து கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-04-20 19:00 GMT

அளக்குடி கிராமத்தில் ரூ.25½ கோடியில் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையை பலப்படுத்தும் பணிகள் குறித்து கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

கொள்ளிடம் ஆற்றங்கரை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை பகுதி உள்ளது. இந்த பகுதியில் மழை, வெள்ள காலங்களில் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.25 கோடியே 44 லட்சம் மதிப்பில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆற்றங்கரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலந்துரையாடல்

அதைத்தொடர்ந்து கீழமாத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.65 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகள், கிராம நிர்வாக அலுவலகம், நூலக கட்டிடம் சீரமைப்பு பணிகள் மற்றும் ஓலையம்புத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கீழமாத்தூர் கிராமத்தில் அங்கன்வாடியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்குள்ள குழந்தைகளிடம் கல்வி மற்றும் சத்துணவு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சிவசங்கர், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ரெஜினா ராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ணசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி அமுல்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்