திருக்கோவிலூர், மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா

திருக்கோவிலூர், மணலூர் பேட்டையில் 2ஆண்டுகளுக்கு பிறகு ஆறுத்திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) விகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது

Update: 2023-01-16 18:45 GMT

திருக்கோவிலூர்

ஆற்றுதிருவிழா

திருக்கோவிலூர் மற்றும் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் ஆற்று திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மணலூர்பேட்டையில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கலந்து கொள்வது தனி சிறப்பாகும். இதுதவிர சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களில் இருந்து வரும் உற்சவ மூர்த்திகளுக்கும் தீர்த்தவாரி நடைபெறும்.

இதேபோல் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் சுமார் 10-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வாா்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் கூட்டம் இன்றி சம்பிரதாயத்திற்கு நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

ஆனால் இந்த ஆண்டு பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் நாளை மறுநாள் ஆற்று திருவிழா நடைபெற உள்ளதால் இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் அனைத்து துறையினர் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பாலாஜி பூபதி, செயலாளர் அருள், விழாக்குழு தலைவர் தெய்வசிகாமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கு வரும் பொது மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், விழாவை சரியான நேரத்தில் நடத்தி முடித்திட வேண்டும் என்பது குறித்துபேசப்பட்டன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேற்கண்ட 2 இடங்களில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2 இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் 600 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடபட்டுள்ளது. குற்ற செயல்களை தடுக்க சாதாரண உடையில் 50 போலீசார் ரோந்து பணியில் இருப்பாா்கள்.

திருவிழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை கைது செய்ய போலீசார் தேடப்படும் குற்றவாளிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் பட்டியலின் அடிப்படையிலும், குடிபோதையில் வருபவர்களை கைது செய்யவும் அதற்கான வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் முன்னின்று செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்