ரூ.50 கோடியில் அறிவிக்கப்பட்ட சனத்குமார் நதி கால்வாய் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

ரூ.50 கோடியில் அறிவிக்கப்பட்ட சனத்குமார் நதி கால்வாய் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Update: 2022-10-08 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.50 கோடியில் அறிவிக்கப்பட்ட சனத்குமார் நதி கால்வாய் சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பாசன வசதி

தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சிறிய நதிகளில் ஒன்றாக சனத்குமார் நதி உள்ளது. வத்தல்மலை அடிவார பகுதியில் இருந்து தொடங்கும் சனத்குமார் நதி தர்மபுரி வழியாக பாய்ந்து கம்பைநல்லூர் அருகே தென் பெண்ணையாற்றில் கலக்கிறது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் அன்னசாகரம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளின் உபரிநீர் சனத்குமார் நதி வழியாக ஓடுவது வழக்கம்.

இந்த நதி ஓடும் சுமார் 40 கி.மீட்டர் பகுதியில் உள்ள கால்வாய் மூலம் தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பாசன வசதி பெற்று வந்தன.

ஆக்கிரமிப்புகள்

இந்த நிலையில் பல ஆண்டுகளாக சனத்குமார் நதி ஓடும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சனத்குமார் நதி கால்வாயில் தண்ணீர் ஓடும் பரப்பின் பெரும் பகுதி செடி, கொடிகள் மற்றும் புதர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இந்த நதியில் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் கலக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சனத்குமார் நதி கால்வாய் பல்வேறு இடங்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் போல் மாறி உள்ளது.

எனவே சனத்குமார் நதி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். மேலும் கால்வாய், தண்ணீர் செல்லும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தர்மபுரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கிடப்பில் போடப்பட்டது

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சனத்குமார் நதி கால்வாயை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டப்பணிகள் இதுவரை வெறும் அறிவிப்பாகவே இருந்து தற்போது வரை தொடங்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்ட இந்த பணியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கழிவுநீர் கலக்கிறது

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட பொது மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தர்மபுரியைச் சேர்ந்த பாலாமணி:- தர்மபுரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய சாகுபடிக்கு பயன்பட்ட சனத்குமார் நதி தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாய் போல் மாறிவிட்டது. இந்த நதியில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் பருவமழை நன்றாக பெய்துள்ளது. இருந்த போதிலும் சனத்குமார் நதி கால்வாயில் மழைநீர் குறிப்பிடத்தக்க அளவில் ஓடவில்லை. இந்த கால்வாயில் மழைநீர் ஓடும் பரப்பில் பெரும் பகுதியை புதர்களும், செடி கொடிகளும் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு

கம்பைநல்லூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார்:- சனத்குமார் நதி கால்வாய் ஓடும் பகுதியில் இரு கரையோரங்களிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுவிட்டன. இந்த ஆக்கிரமிப்புகளை உரிய ஆய்வின் மூலம் கண்டறிந்து அகற்ற வேண்டும். இந்த நதி கால்வாயில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை கண்டறிந்து அதை தடுப்பதற்கான நிரந்தர தீர்வுகளை காண வேண்டும். ரூ.50 கோடியில் அறிவிக்கப்பட்ட சனத்குமார் நதி கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் திட்டத்தை காலதாமதம் இல்லாமல் விரைவாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்