சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-12-04 19:00 GMT

திருத்துறைப்பூண்டி பகுதியில் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சரக்கு வாகனங்களில் பயணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும், 92 சிறிய கிராமங்களும் உள்ளன. கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகர பகுதியை பெரிதும் நம்பி உள்ளனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் திருமணம், காதணி விழா, புதுமனைபுகுவிழா, வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணிப்பது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.

குறைந்த வாடகை என்பதால் இத்தகைய சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து விசேஷ வீடுகளுக்கு செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றுவது, வாகனங்களில் தாறு,மாறாக ஏறி ஆபத்தான முறையில் அமர்ந்து கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆபத்தான பயணம்

இத்தகைய பயணத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். போலீசார் பல முறை எச்சரித்தாலும் கூட தொடர்ந்து இதே முறையில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது தொடர்ந்து நடக்கிறது.

சரக்கு வாகனங்களை பயணிகளை ஏற்றி செல்லும் வாகனமாக பயன்படுத்துவதை தடுத்த நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அறிவுறுத்த வேண்டும்

இதுகுறித்து வக்கீல் அருள்செல்வம் கூறியதாவது:- குறைந்த செலவில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இதில் உள்ள ஆபத்துகளை யாரும் பார்ப்பதில்லை. ஆகையால் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்தால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். பொதுமக்கள் விபத்து இல்லாத பயணம் மேற்கொள்ள வேண்டுமானால் இதுபோல சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்கள் பயணம் செய்யக் கூடாது. அப்படி பயணம் செய்பவர்களுக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

வழக்கமாக மாறி விட்டது

சமூக ஆர்வலர் கல்விப்பிரியன் நீதிராஜா:- திருத்துறைப்பூண்டி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்த பகுதி மக்கள் ஒவ்வொரு தேவைகளுக்காகவும் வெளியூருக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் விவசாய தொழில் மட்டுமே நடைபெறுவதால் போதிய வருமானம் இல்லாமல் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வது வழக்கமாக உள்ளது. இது மிகுந்த ஆபத்தானது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்