கோத்தகிரியில் நீர்நிலையில் வாகனங்களை கழுவுவதால் தண்ணீர் மாசுபடும் அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கோத்தகிரியில் நீர்நிலையில் வாகனங்களை கழுவுவதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கோத்தகிரி
கோடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமப்பகுதியில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது. இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கோத்தகிரிக்கு கொண்டுவரப்பட்டு குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யபட்டு வருகிறது. தற்போது தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது சரக்கு வாகனங்களை இப்பகுதிக்கு கொண்டுச் சென்று தடுப்பணை நீரைப் பயன்படுத்தி கழுவி வருகின்றனர். மேலும் அவர்கள் சோப்பைப் பயன்படுத்தி வருவதால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகனங்கள் கழுவாமல் தடுக்க தடுப்பணைக்குள் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.