நாகை நகருக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம்

கஜா புயலால் அலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் நாகை நகருக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-17 16:00 GMT

கஜா புயலால் அலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் நாகை நகருக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலை தடுப்புச்சுவர்

சுனாமி, புயல், மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்திற்கு ஆறாத வடுவை உண்டாக்கியது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 2006-ம் ஆண்டு நாகை அருகே கல்லாரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக கீச்சாங்குப்பம் முடசல்காடு வரை, கடலோரத்தில் கருங்கல் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.

கடல்நீர் நகருக்குள் புகும் அபாயம்

அலை தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதால் கல்லார், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தில் இருந்து தப்பித்து வந்தது. இதுதவிர விசைப்படகுகள் அணையும் இடம், மீன்வளப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான மெட்ரோ மீன் பதன கூடம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் இந்த கருங்கல் தடுப்புச் சுவர் பல இடங்களில் சரிந்து கீழே விழுந்து சேதமடைந்து விட்டன. இதனால் அலை சீற்றம் அதிகரிக்கும் போது, கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

மேலும் கீச்சாங்குப்பம் முடசல் காட்டில் இருந்து முகத்துவாரம் வரை தற்போது கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் கடலும், கடுவையாறும் ஒன்று சேர்ந்து கடல்நீர் நாகை நகருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்படும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கஜா புயலில் சேதம் அடைந்தது

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் கூறுகையில், சுனாமிக்கு பிறகு கல்லாரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக கீச்சாங்குப்பம் முடசல்காடு வரை கருங்கல் அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. கஜா புயலில் இந்த அலை தடுப்புச்சுவர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் அலை சீற்றத்தால் மீண்டும் கடல்நீர் மீனவ கிராமத்துக்குள் புகுந்து விடுகிறது.

இந்த கருங்கல் தடுப்புச்சுவரை சரி செய்யாவிட்டால் கடல் நீர் நகருக்குள் புகுந்து, சுனாமியை விட பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே கல்லார் முதல் கீச்சாங்குப்பம் முடசல் காடு வரை சேதமடைந்த அலை தடுப்புச்சுவரை சீரமைக்கவும், தடுப்புச்சுவரை முகத்துவாரம் வரை அமைக்கவும் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தரமாக சீரமைக்க வேண்டும்

மீனவர் தேவராஜ் கூறுகையில், கடற்கரை கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்கவே அலை கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. நாகை கீச்சாங்குப்பம் கடற்கரையோரத்தில் கருங்கற்களை வலையில் கட்டி அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இதனால் அலை தடுப்புச்சுவர் கஜா புயலின் போது அடித்து செல்லப்பட்டது. பெரும்பாலான இடங்களில் வலையால் கட்டப்பட்ட கருங்கற்கள் வரிசையாக சரிந்து கிடைக்கின்றன. இதனால் கடல் சீற்றம் ஏற்படும் போது கடல் நீர் மீனவ கிராமத்திற்குள் புகுந்து அவதிப்பட்டு வருகிறோம். எனவே சேதமடைந்த அலை தடுப்புச்சுவரை, தரமாக சீரமைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்