தொடர் மழையால் முட்டைகோஸ் அழுகும் அபாயம்
கோத்தகிரியில் தொடர் மழையால் முட்டைகோஸ் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் தொடர் மழையால் முட்டைகோஸ் அழுகும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
காய்கறி சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்காக உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அங்கிருந்து மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, மடித்தொரை, கட்டபெட்டு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணாமாக தோட்டத்தில் பயிரிட்டு இருந்த முட்டைகோஸ் பயிர்கள் அழுக தொடங்கி உள்ளது.
முன்கூட்டியே அறுவடை
இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த முட்டைகோஸ் பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே அறுவடை செய்ய முடிவு செய்து இருக்கின்றனர். இதுகுறித்து மடித்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,
தற்போது முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தோட்டங்களில் பயிரிட்டு உள்ள முட்டைகோஸ் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். விளைநிலங்களில் இலைகளில் தண்ணீர் எப்போதும் இருப்பதால், முட்டைகோஸ் அழுகி வருகின்றன. எனவே, நஷ்டம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.