பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சரிந்து விழும் அபாயம்
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ள தடுப்புச்சுவரை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாறை அருகே புல்லாவெளிக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையோரம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்தநிலையில் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் புல்லாவெளி பகுதியில் உள்ள மலைப்பாதையில், புதிய தடுப்புச்சுவர் பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது.
இதனால் அந்த தடுப்புச்சுவர் எப்போது வேண்டுமானாலும் சரிந்து பள்ளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தடுப்புச்சுவர் சேதமடைந்த மலைப்பாதையையொட்டி சுமார் 1,000 அடி ஆழமுள்ள ஆபத்தான பள்ளத்தாக்கு உள்ளது. எனவே விபத்து அபாயத்தை தடுக்க சேதமடைந்த தடுப்புச்சுவரை விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.