மருத்துவக்கழிவுகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கழிவுகள் அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-05-30 19:00 GMT

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர சுமார் 20 பிரசவங்கள், 15-க்கும் மேற்பட்ட குடல் இறக்கம், எலும்புமுறிவு உள்பட பல்வேறு அறுவை சிகிச்சைகளும் மருத்துவமனையில் நடைபெறுகிறது. இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதன் மூலம் தினமும் 50 கிலோ அளவுக்கு மருத்துவக்கழிவுகள் (உயிர் வேதியியல் கழிவு) தேங்குகிறது. இதனை காற்று புகாதவாறு பைகளில் கட்டி முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தினமும் தேங்கும் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக பிளாஸ்டிக் பைகளில் போட்டு மருத்துவமனையின் மேற்கு பகுதி நுழைவுவாயில் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக தேங்கி கிடக்கும் மருத்துவக்கழிவுகள் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. அத்துடன் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு இதன்மூலம் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தேங்கி கிடக்கும் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்