சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம்

சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய்கள் பரவும் அபாயம்

Update: 2023-02-13 19:17 GMT

தஞ்சை அருகே விளார் புறவழிச்சாலை பகுதியில் சாலையோரத்தில் குவியல், குவியலாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தஞ்சை சுற்றுலா நகரம்

தஞ்சை மாநகரம் வரலாற்று சிறப்பு மிக்க நகரம் ஆகும். இங்கு உலக பிரசித்தி பெற்றதஞ்சை பெரிய கோவில், அரண்மனை, அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் தஞ்சை நகரை சுற்றிலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து தஞ்சை நகருக்குள் வராமல் நகரை கடந்து செல்லும் வகையில் இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வரும் புறநகர் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன.

விளார் புறவழிச்சாலை

இந்த புறவழிச்சாலையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக மாரியம்மன்கோவில் பகுதி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மேம்பாலம், விளார் புறவழிச்சாலை பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தஞ்சையை அடுத்த விளார் புறவழிச்சாலை பகுதிகளில் தான் அதிக அளவில் குப்பைகள் குவியல், குவியலாக கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. அதிலும் மருத்துவ கழிவுகள் தான் அதிக அளவில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன. அதுவும் இரவு நேரத்தில் சரக்கு ஆட்டோக்களில் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.

மருத்துவ கழிவுகள்

குறிப்பாக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் சிறிய, சிறிய பாலிதீன் பைகளில் அடைத்தவாறு கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவகழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால் நோய்பரவும் அபாயம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து மருத்துவகக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்தால் இது போன்று கொட்டுவது தடுக்கப்படும்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

இல்லையென்றால் இது தொடர்கதையாகி விடும். மேலும் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது புறவழிச்சாலையில் ஆங்காங்கே கொட்டி வருகிறார்கள். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்