வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடிகள் பாதிக்கப்படும் அபாயம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-02 18:59 GMT

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பருத்தி செடிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இது தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 8 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழை

பருத்தி சாகுபடியை பொருத்தவரை கடந்த ஆண்டு 13 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 3 ஆயிரம் எக்டேர் கூடுதலாக 16 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வலங்கைமான், குடவாசல், நன்னிலம் திருவாரூர் பகுதிகளில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி வயல்களில் களை எடுக்கும் பணி, உரம் இடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த ெதாடர் மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பருத்தி செடிகளின் வேர் அழுகி வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது. பூக்கள் உதிர்ந்து பருத்தி பிஞ்சுகள் பாதிப்படைவதால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மகசூல் பாதிக்கும் அபாயம்

இது குறித்து இலவங்காா்குடி பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன்:- நான் சுமார் 3 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். தற்போது பெய்த மழையால் பருத்தியில் வேர் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி வருகிறேன். மழையால். சில செடிகளில் பூக்கள் உதிர்ந்து விட்டது. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திடீரென மழை பெய்ததால் வயலில் அதிகளவில் தண்ணீா் தேங்கி விட்டது. பாதித்த பருத்தி பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

வடகண்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கருணாநிதி:- பருத்தியை மாசி பட்டத்தில் சாகுபடி செய்து உரம், பூச்சி கொல்லி மருந்து தெளித்து களை எடுத்து 45 நாட்களாக பிறகு அறுவடை செய்யலாம் என காத்திருந்தேன். கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி பருத்தி பயிர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தால், அதிக அளவில் மகசூல் கிடைக்கும். இதை வைத்து நெல் சாகுபடி செய்ய வாங்கிய கடனை அடைக்கலாம் என நம்பிக்கையில் இருந்தேன். இதை மழை கெடுத்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

வடகண்டம் பகுதியை சேர்ந்த கலைசெல்வி:- பருத்தி செடிகளுக்கு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சினேன். தற்போது பெய்த மழையால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் செடிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மழை தொடர்ந்தால் பருத்தி செடிகள் முற்றிலும் பாதிக்கப்படு்ம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரமானியம் அல்லது இழப்பீடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிர கண்காணிப்பு

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் சுமார் 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது வரை பெய்த மழையால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்