ஆனைமலை-வேட்டைக்காரன்புதூர் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணியால் விபத்து அபாயம்-வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க கோரிக்கை
ஆனைமலை-வேட்டைக்காரன்புதூர் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஆனைமலை
ஆனைமலை-வேட்டைக்காரன்புதூர் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
தரைப்பாலம் கட்டும் பணி
ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பரம்பிக்குளம், டாப்சிலிப், ஆழியார், அழுக்கு சாமியார் கோவில் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இந்தநிலையில் ஆனைமலை -வேட்டைக்காரன் புதூர் செல்லும் வழித்தடத்தில் ஒரு வார காலமாக தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தரைப்பாலம் அமைப்பதற்கு முக்கிய சாலையை ஒருபுறம் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் சமயத்தில் நெடுஞ்சாலை துறையினர் பணி மேற்கொள்வதால் ஒவ்வொரு வாகனமும் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து செல்கின்றன. இதனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவும் காலதாமதம் ஏற்படுகிறது.
மாற்றுப்பாதையில்...
பாலம் கட்டும் பணியும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- 7 அடிக்கு இருந்த தரைத்தளத்தை 15 அடிக்கு விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் தோண்டி வாகனங்களை ஒரு புறம் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாலம் கட்டுவதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இங்கு ஒருபுறம் தோண்டி 15 நாள் வேலை செய்கின்றனர். மற்றொருபுறம் தோண்டி 15 நாட்கள் வேலை செய்கின்றனர். எனவே வாகனங்களை இவ் வழியாக அனுமதிப்பதை நிறுத்திவிட்டு வானங்களை மாற்றுப்பாதை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.