கள்ளக்குறிச்சியில் கலவரம்: போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு

போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-17 05:53 GMT

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இந்த சூழலில் மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நான்குமுனை சந்திப்பில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் உள்ள அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளது. வலதுபுற விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதியில் காயம், எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆடைகளில் ரத்தக்கரை உள்ளது. பல காயங்கள் காரணமாக அதிக ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதிக் கருத்து உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை நிலுவையில் உள்ளது. அந்த அறிக்கையின் முடிவு வந்ததும், மாணவி எப்படி இறந்தார்? என்பது குறித்து முழுமையாக தெரியவரும்.

சாலை மறியல் போராட்டம்

இந்நிலையில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். தொடர்ந்துபள்ளியின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தற்போது போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கல்வீச்சில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு டிஐஜி பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்