"ரேஷன் கடையில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும்"
ரேஷன் கடையில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி, காந்திநகர், திடீர்நகர், வினோபாநகர், சாஸ்தா நகர், நல்லாக்கவுண்டன்நகர், தும்மிச்சம்பட்டி புதூர், கஸ்தூரி நகர், ஏ.பி.பி. நகர் ஆகிய 9 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் 'நமக்கு நாமே' திட்டத்தின்கீழ் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதையடுத்து ரேஷன் கடைகளுக்கான புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரேஷன் கடைகளுக்கான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளை அவர் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் மக்களின் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. கண்கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாக்கெட்டுகளை அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரப்பலாறு, தலையூத்து அருவி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இடையக்கோட்டை பகுதியும் சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும் என்றார்.
இந்த விழாவில் திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.