சாணார்பட்டி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்

சாணார்பட்டி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-24 21:00 GMT

சாணார்பட்டி பகுதியில் பெரிய அணை, ஆறுகளின் பாசன வசதி இல்லை. இருந்தபோதிலும் சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ராஜக்காபட்டி, கூவனூத்து, வேம்பார்பட்டி, திம்மணநல்லூர், கணவாய்பட்டி, அஞ்சுகுளிபட்டி, மருநூத்து, ஆவிளிபட்டி, கம்பிளியம்பட்டி உள்பட 21 ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட சிறு பாசன குளங்கள் உள்ளன. இந்த குளங்களின் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பரவலான பெய்ததால் பல்வேறு குளங்கள் நிரம்பின. அதைத்தொடர்ந்து சாணார்பட்டி பகுதி விவசாயிகள் குளங்களின் பாசனத்தை பயன்படுத்தி நெல் நடவு செய்தனர். இந்தநிலையில் தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடை நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் எந்திரங்கள் மூலம் நெல்லை அறுவடை செய்து, மூட்டைகளில் கட்டி அவற்றை விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோபால்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பருவமழை கைக்கொடுத்ததால் சாணார்பட்டி பகுதியில் நெல் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. 75 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.1,500-க்கு உள்ளூர் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த விைல கட்டுப்படியாகவில்லை. நடவு பணி, களை எடுத்தல், உரம், பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்தல், அறுவடை செலவு என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், தற்போது வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்