நெல் அறுவடை பணி மும்முரம்

ஆனைமலையில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட வைக்கோல் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

Update: 2022-11-06 18:45 GMT

ஆனைமலை,

ஆனைமலையில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட வைக்கோல் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.

வைக்கோல் தட்டுப்பாடு

ஆனைமலை ஒன்றியத்தில் ஆண்டுக்கு 2 போகத்தில் 5,400 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் நெல் விவசாயத்தை கைவிட்டனர். பின்னர் தென்னை விவசாயத்திற்கு மாறி உள்ளனர். இதனால் வரும் காலங்களில் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருந்தது.

கடும் தட்டுப்பாடு காரணமாக பழனி மற்றும் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் இருந்து 30 கிலோ எடை கொண்ட வைக்கோல் ஒரு கட்டு ரூ.350-க்கு விவசாயிகளுக்கு கிடைத்தது. கோ-51 ஏ.எல்.எஸ்.டி. நெல் ரகங்கள் 110 நாட்கள் சாகுபடி காலம் ஆகும். தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதால், கடந்த ஒரு மாதமாக ஆனைமலை பகுதியில் நெல் அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ரூ.150-க்கு விற்பனை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது

கடந்த 3 மாதங்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கும்பகோணம், தஞ்சாவூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வைக்கோல் இங்கு விற்பனை செய்யப்பட்டது. 25-30 கிலோ எடை கொண்ட வைக்கோல் கட்டு ரூ.280 முதல் ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் ரூ.200 முதல் ரூ.250-க்கு விற்பனையானது. தற்போது ஆனைமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைக்கோல் நிறம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இதனால் 30 கிலோ எடை கொண்ட வைக்கோல் கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 30 கிலோ எடை கொண்ட வைக்கோல் 40 முதல் 45 கட்டுகள் கிடைக்கிறது. அறுவடை செய்த பிறகு வைக்கோல் சுற்றும் எந்திரம் கிடைப்பதற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. போதுமான வைக்கோல் கிடைப்பதால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்