சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2.83 கோடி மோசடி செய்த வழக்கில் அரிசி வியாபாரி அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ரெட்டுகாரகுமர முதலி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் தனது தந்தை பொன்னுசாமி மளிகை கடை நடத்தி வருகிறார். அவர் மூலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த அரிசி வியாபாரி நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என சசிகுமார் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.
ரூ.2.83 கோடி மோசடி
அதன்பேரில் நானும் எனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் இருந்து கடந்த 2015- 2016-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அரசு வேலைக்காக ரூ.2 கோடியே 83 லட்சத்தை பல தவணைகளில் சசிகுமாரிடம் வழங்கினேன். ஆனால் அவர் யாருக்கும் அரசு வேலை வாங்கி தராமல் மோசடி செய்துவிட்டார்.
பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, சசிகுமார், அவருடைய மனைவி சாந்தலட்சுமி, அரிசி வியாபாரி நடராஜன், அவருடைய மனைவி புவனேஸ்வரி மற்றும் இவர்களது கூட்டாளிகளான முகமது உஸ்மான், மணிகோபி ஆகியோர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
6 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அரவிந்த்குமார் மற்றும் அவரை சார்ந்த நபர்களிடம் இருந்து போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமார் மற்றும் அவரது மனைவி சாந்தலட்சுமி, அரிசி வியாபாரி நடராஜன், புவனேஸ்வரி, முகமது உஸ்மான், மணிகோபி ஆகியோர் ரூ.2 கோடியே 83 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் கூட்டு சதி, மோசடி உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சென்னையில் ஒரு டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகுமார் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனால் இவ்வழக்கில் சிறையில் இருக்கும் நிலையிலேயே அவரை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி வழக்கிலும் போலீசார் கைது செய்தனர்.
அரிசி வியாபாரி கைது
இதுதவிர கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முகமது உஸ்மானையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் அரிசி வியாபாரி நடராஜன், சாந்தலட்சுமி, மணிகோபி, புவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அரிசி வியாபாரி நடராஜனை நேற்று முன்தினம் இரவு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.