கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவு வினியோகம்-மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த உணவை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
செறிவூட்டப்பட்ட அரிசி
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசு பொது வினியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவு திட்டம் மற்றும் பிற நல திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைக்கப்பட்ட உணவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழங்கினார்.
ரத்த உற்பத்தி
அப்போது அவர் செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கரு வளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி-12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாமக்கல் மண்டல மேலாளர் யசோதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.