தருமபுரி மாவட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு-விவசாயிகள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Update: 2022-11-19 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல் பயிரை காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்று வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் பயிருக்கு காப்பீடு

தர்மபுரி மாவட்டத்தில் சம்பா நெல் பயிரை கடந்த 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சம்பா நெல் பயிரை காப்பீடு செய்து கொள்ள நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும் விடுபட்ட விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பாட்டில் உள்ளன.

எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.547.50 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயன் பெறலாம்

கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னர் விரைவில் இந்த திட்டத்தில் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்