டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு; ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் ஆய்வு
தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்ய உள்ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம்
மகளிர் உரிமைத்தொகை முதல்-அமைச்சரின் கனவு திட்டம். அதில் தகுதியானவர்கள் விடுபடாமல் இருக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி, பதிவேற்றம் செய்யப்படுகிறது. சில விண்ணப்பங்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணி 99 சதவீதம் முடிந்துவிட்டது. சில இடங்களில் சோதனை செய்ய முடியவில்லை. 1,045 குளத்தில் 908 குளங்கள் சோதனை ஓட்டம் செய்து முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள குளத்தை பரிசோதனை செய்ய தேவையான அளவு தண்ணீர் இல்லை. தண்ணீர் வந்ததும் 10 நாட்களில் சோதனை செய்துவிட்டால் திட்டம் நிறைவாகும். அப்போது அத்திக்கடவு -அவினாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
பரிசு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 10 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. போதை மறுவாழ்வு மையம் முறையாக செயல்படுத்த கலெக்டர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடையில் பணியில் இருக்கும் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளருக்கு அந்த கடைக்கு தினசரி மதுவாங்க வருபவர்களை அடையாளம் தெரியும்.
வழக்கமாக இல்லாமல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்கும் எண்ணத்துடன் இளைஞர்கள், சிறுவர்கள் கடைகளுக்கு வரும்போது, அவர்களை தடுத்து மதுவின் தீமை குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, மதுவாங்குவதை தடுக்கும் விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.