மயான பாதையை இலவச வீட்டுமனை பட்டாக்களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்; கலெக்டரிடம் மனு
மயான பாதையை இலவச வீட்டுமனை பட்டாக்களாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;
மயான பாதையை இலவச வீட்டுமனை பட்டாக்களாக மாற்றியதை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், ஆதி திராவிட நலத்துறை அலுவலர் நடராஜன், வழங்கல் அலுவலர் சுதா, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெபா, பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
274 கோரிக்கை மனுக்கள்
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 274 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
கூட்டத்தில் ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் முருகேசன் என்பவருக்கும் மற்றும் அமைப்புகளுக்கான விருதை பாரத் மாண்டிசோரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கும் கலெக்டர் வழங்கினார்.
மயான பாதை ஆக்கிரமிப்பு
கீழ ஆம்பூர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய பெரிய தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு செல்லும் வயல்வெளி பாதையை ஆக்கிரமித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க பயனாளிகள் தேர்வு செய்து வருவதாகவும், மயானத்திற்கு செல்ல இந்த ஒரு பாதை மட்டும் தான் இருப்பதாகவும், எனவே இலவச வீட்டுமனை பட்டாவாக மாற்றியதை ரத்து செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த மூதாட்டி
புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியைச் சேர்ந்த முப்புடாதி மனைவி செண்பகவல்லி என்ற மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை சோதனை செய்தபோது மண்எண்ணெய் பாட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை வாங்கிக் கொண்டு அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் ஒரு மனு கொடுத்தார். அதில், "தனக்கு உடல் ஊனமுற்ற மகனும், காசநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்த கணவரும் உள்ளனர். எங்களது வீடு அருகே உள்ள கோவிலை விரிவுபடுத்தி கட்டுகின்றனர். இதற்காக என் வீட்டை காலி செய்ய அச்சுறுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்த பிறகாவது நடவடிக்கை எடுப்பீர்களா?" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் அவரிடம் சமரசமாக பேசி கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தனர்.