3 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அலுவலர்கள், கவுன்சிலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்
3 மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அலுவலர்கள், கவுன்சிலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்று மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள், கவுன்சிலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை, கழிவுநீர் கால்வாய், ஓடைகள், தூர்வாருதல், புதிதாக கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல், வடகிழக்கு பருவமழையின் போது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறும் போது, 3 மாதங்களுக்கு ஒரு முறை அலுவலர்கள், கவுன்சிலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறினர்.
கூட்டத்தில் துணைமேயர் சாரதாதேவி, மண்டலக்குழுத்தலைவர் உமாராணி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, தனலட்சுமி, மூர்த்தி, சங்கீதா, ராஜ்குமார், சாந்தமூர்த்தி, வசந்தா, ராஜேஸ்வரி, கிரிஜா, அம்சா, சையத்மூசா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.