திடக்கழிவு மேலாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: தூய்மைப் பணி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்

சென்னையில் ‘தீவிரத் தூய்மைப் பணி' திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-30 07:30 GMT

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கட்டிடத்தில், திடக்கழிவு மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் கமிஷனர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், துணை கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) விசு மகாஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:-

கடந்த 11-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 79.46 மெட்ரிக் டன் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் சேகரிக்கப்பட்டு விஞ்ஞான முறைப்படி எரியூட்டம் செய்யப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியில் 73.55 கிலோ மீட்டர் நீளமுடைய 18 சாலைகள் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 340 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பையில்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கும், மக்காத குப்பைகளை தனியாகப் பிரித்து பெறும் வகையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் களஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அதிக குப்பை கொட்டும் இடங்களில் கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திட வேண்டும். 2 வாரங்களுக்கு ஒருமுறை சனிக்கிழமையில் தீவிரத் தூய்மைப் பணி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

இதேபோல, சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் கட்டுமானக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் போன்றவற்றை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுவரொட்டிகளை அகற்றி அந்த இடங்களில் வண்ண ஓவியங்களை வரைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்