அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.

Update: 2023-08-31 15:00 GMT


திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம்  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.

அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தீரஜ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து வேளாண்மை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பணி விவரங்கள்

மேலும் வேளாண் உபகரணங்கள், உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணி விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பின்னர் பள்ளிக்கல்வி துறை மூலம் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமை திட்டம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையத்சுலைமான், உதவி கலெக்டர்கள் மந்தாகிரி, தனலட்சுமி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்