3 துறைகளின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

3 துறைகளின் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2022-06-14 23:47 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதல்-அமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள துறையான வருவாய்த்துறை, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கி கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய முக்கியமான இத்துறையின் மூலமாக பல சேவைகளை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொண்டு சேர்த்திட வேண்டும் என்றும், வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் உள்ள சேவைகள், எந்த தாமதமுமின்றி உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரூ.4,816 கோடி செலவு

அதேபோல, ஓய்வூதியத்திட்டத்தின் கீழ், முதியோர், ஆதரவற்ற விதவை, கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பல பயன்கள் பெறுவதற்காக ரூ.4,816 கோடி செலவிடப்படுகிறது. இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்கான அலகாக ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இத்தகைய மிக முக்கியமான துறையாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஏழை எளிய மக்கள் அரசினுடைய உதவிகளை, ரேஷன் கடைகள் மூலமாக நேரடியாக பெற்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இத்துறை சிறந்த செயல்திறனுடன் செயல்படுவதற்கு தேவையான அனைத்து உதவிளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பங்கேற்றவர்கள்

கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்