மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

Update: 2023-06-12 19:30 GMT

கோவை

தொழில்நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கலெக்டர் கிராந்திகுமாரிடம் த.மா.கா.வினர் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத் தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விஷப்பாம்புகள்-செல்பூச்சிகள்

கோவை 26-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மத்திய உணவுபொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து கடந்த ஒரு மாதமாக அதிகளவில் செல்பூச்சிகள் வெளியேறி ஸ்ரீராம் நகர், ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதியில் பரவி வருகிறது. சாப்பாடு உள்பட அனைத்து பொருட்களிலும் இந்த செல்பூச்சிகள் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார் கள்.அது போன்று உணவுப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு மற்றும் பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரும்பு குடோன் ஆகிய பகுதிகளில் இருந்து விஷப்பாம்புகள் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மின் கட்டண உயர்வு

த.மா.கா. கோவை மாவட்ட தலைவர்கள் வி.வி.வாசன், செல்வராஜ், குணசேகரன், கார்த்திகேயன் மற்றும் இளைஞர் அணி தலைவர் கார்த்திக் கண்ணன், நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் வணிக, தொழில் நிறுவனங்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. இந்த நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பது மேலும் விலைவாசி உயர வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடைகள்

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நர்மதா தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள் தங்கள் லட்சியம் குறித்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில் தமிழகத்தில் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபான கடைகளால் பல இடங்களில் விபத்துகள், குற்ற சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 22-ந் தேதிவரை 1,108 சாலை விபத்துகள் நடந்து உள்ளது. அதில் 262 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர மாநகரில் பல இடங்களில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் டாஸ்மாக கடைகள் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்