திருச்செங்கோடு
கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் மனோஜ் முனியப்பன். இவர் தலைமையில் அலுவலர்கள், கோர்ட்டு உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளார். அதன்பிறகு தாசில்தார் மனோஜ் முனியப்பன் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். எனவே தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தாசில்தார் பணி இடைநீக்கத்தை உடனே ரத்து செய்து, அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பணியை புறக்கணித்து நேற்று தமிழகம் முழுவதும் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தாசில்தார் விஜயகாந்த் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு வட்ட தலைவர் சரவணகுமார், வட்ட செயலாளர் சாந்தகுமார், சங்க பொறுப்பாளர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் திருச்செங்கோடு அலுவலக ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.