தசரா திருவிழாவுக்கு சென்று திரும்பிய 2 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம்மோதி பலி

சாத்தான்குளம் அருகே தசரா திருவிழாவுக்கு சென்று திரும்பிய 2 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம்மோதி பலியாகினர்.

Update: 2022-10-06 18:45 GMT

தட்டார்மடம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு சென்று திரும்பிய 2 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக பலியானார்கள்.

சூரசம்ஹாரம் பார்க்க சென்றனர்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் முருகேசன் (35).

இவர்கள் 2 பேரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் புறப்பட்டனர்.

வாகனம் மோதியது

பின்னர் அவர்கள் நள்ளிரவில் தங்களது ஊருக்கு புறப்பட்டு வந்தனர். சாத்தான்குளம் அருகே முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில் வளைவில் சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் தூக்கிவீசப்பட்ட நாராயணன், முருகேசன் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

2 பேர் பலி

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாராயணன் உயிரிழந்தார். முருகேசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசனும் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தசரா திருவிழாவுக்கு சென்று திரும்பிய 2 பக்தர்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்