முன்னாள் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

Update: 2023-09-05 19:30 GMT

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தினத்தையொட்டி, புத்தக பையுடன் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களுக்கு, முன்னாள் ஆசிரியர்கள் பாடம் நடத்தி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஆசிரியர் தின விழா

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு 1995-ம் ஆண்டு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார்.

புத்தகப்பை சுமந்து வந்தனர்

முன்னாள் அங்கன்வாடி பணியாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் யாரப் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் தமிழரசி பங்கேற்றார். இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் ரகுமான் ஷெரிப் சிறப்புரையாற்றினார். அப்போது, முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்த, முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிக்கால நினைவு கூறும் வகையில், வகுப்பறைக்கு புத்தக பை சுமந்தும், மதிய உணவுடன் கொண்டு சென்றனர். அவர்களுக்கு முன்னாள் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

பின்னர், பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் ஆசிரியர்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போடுவது, அடிவாங்குவது, உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் வேலுமணி, ஹேமாவதி பரந்தாமன், பிரதோஷ்கான், ஜெயக்குமார், சந்தோஷ், மதன்ராஜ், பாலாஜி, சீனிவாசன், கராமத் மற்றும் ஆசிரியர்கள், பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பூங்கொத்து, சாக்லெட் வரவேற்பு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழாவையொட்டி ஆசிரியர்களுக்கு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடந்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கி, ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள், இனிப்புகள் வழங்கினார்.

பள்ளியின் உதவி தலைமையாசிரியர்கள் விஜயலட்சுமி, பெருமாள்சாமி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சுவேதாராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல் நாச்சிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர், மாணவிகள் ஆசிரியர் தினவிழாவை கொண்டாடும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாக்லெட்களை கொண்டு ஆசிரியர்களை வரவேற்றனர்.

மேலும் செய்திகள்