ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்

Update: 2022-11-25 18:45 GMT

விழுப்புரம்

பாலியல் தொல்லை வழக்கு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர்.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஆஜர்

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அப்போதைய தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவரும் தற்போது ஓய்வு பெற்றவருமான திரிபாதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார்.

இந்த சாட்சியம் முடிந்ததும் திரிபாதியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் தரப்பு வக்கீல்களும் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தனர். இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையின் விவரங்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

பிரபாகர் ஐ.ஏ.எஸ். ஆஜராக உத்தரவு

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் தமிழக அரசின் முன்னாள் உள்துறை முதன்மை செயலாளரும், தற்போதைய வருவாய்த்துறை நிர்வாக ஆணையருமான பிரபாகர் நேரில் ஆஜராகும்படி நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்