அகவிலைப்படியுடன் மாற்று ஓய்வூதியம் வழங்கக்கோரி ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்கக்கோரி சேலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-07-29 23:41 GMT

ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை சாசனங்கள் மீது உடனடி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர்கள் அசோசியேசன் பொதுச்செயலாளர் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் உள்பட ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கருணை ஓய்வூதியம்

ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டுறவு வங்கிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய மாற்று ஓய்வூதியமும் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதிய உயர்வு ஆணையில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய ஆணை வெளியிட வேண்டும்.

அனைத்து கூட்டுறவு வங்கிகளில் துணை ஊழியர் பிரிவில் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். நகர வங்கி மற்றும் இதர கூட்டுறவு வங்கிகளுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்