ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் நூதனமுறையில் ரூ.4¼ லட்சம் 'அபேஸ்'

கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி ஏமாற்றி நூதனமுறையில் ஓய்வுப்பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் ரூ.4¼ லட்சத்தை மர்மநபர் ‘அபேஸ்’ செய்தார்.

Update: 2022-07-05 16:30 GMT

கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி ஏமாற்றி நூதனமுறையில் ஓய்வுப்பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரியிடம் ரூ.4¼ லட்சத்தை மர்மநபர் 'அபேஸ்' செய்தார்.

பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர்

காட்பாடி தாலுகா பாரதிநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 66). இவர் வேலூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உதவி பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், கடந்த 2 மாதத்துக்கான வீட்டு மின்கட்டணம் இதுவரை செலுத்தவில்லை. அதனை உடனடியாக செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இதுதொடர்பாக மின்அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்று செல்போன் எண் பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பாண்டியன், கடந்த 2 மாதத்துக்கான மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டேன் என்று கூறினார். மறுமுனையினர் பேசிய மர்மநபர், சர்வர் பிரச்சினை காரணமாக ஆன்லைனில் செலுத்திய மின்கட்டணம் மின்சார வாரியத்தின் கணக்கில் சேரவில்லை. சிறிதுநேரத்தில் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார்.

நூதன முறையில் ரூ.4 ¼ லட்சம் அபேஸ்

அந்த பணத்தை செல்போன் செயலி (ஆப்) மூலம் செலுத்தும்படி கூறி உள்ளார். மேலும் அந்த செயலிக்கான இணைப்பை (லிங்) பாண்டியன் செல்போனுக்கு மர்மநபர் அனுப்பினார். முதற்கட்டமாக அந்த செயலி செயல்படுவதற்கு 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்படியும், பின்னர் மின்கட்டணம் செலுத்தும்படியும் தெரிவித்தார்.

அதையடுத்து பாண்டியன் அந்த செயலிக்கு ரீசார்ஜ் செய்தார். சிறிதுநேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் வைத்திருந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 999் ரூபாயை 2 தவணைகளில் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் பாண்டியனுக்கு மர்மநபர் நூதனமுறையில் ஆன்லைனில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரித்தார். அதில், பாண்டியன் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் ஒருவரின் கிரெடிட் கார்டுக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவலை நம்பி ஆதார், பான்கார்டு எண், வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. உள்ளிட்டவற்றை தெரிவித்து பணத்தை இழக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்