சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மலைப்பாம்பு

வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கிண்டி பாம்பு பண்ணையில் ஒப்படைத்தனர்.

Update: 2023-11-18 20:30 GMT

சென்னை கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்ட மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிண்டி வனத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பை தேடிபார்த்தனர். ஆனால் பாம்பு பிடிபடவில்லை.

மலைப்பாம்பை கண்டுபிடிக்க கிண்டி வனத்துறையினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாம்பு பிடிபடாமல் 15 நாட்களுக்கும் மேலாக கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் மீண்டும் மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட ஐ.ஐ.டி. விடுதி மாணவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை வன உயிரின காப்பாளர் பிரசாந்த் உத்தரவின்பேரில் வேளச்சேரி வனச்சரக ஊழியர்கள் விரைந்து வந்து பாம்பு ஊர்ந்து சென்ற இடத்தை பின்தொடர்ந்தனர்.

சுமார் ஒரு மணிநேர தேடுதலுக்கு பிறகு பாம்பு மறைந்திருந்த இடம் கண்டறியப்பட்டது. வனத்துறையினர் மலைப் பாம்பை லாவகமாக பிடித்து கிண்டி பாம்பு பண்ணையில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு, ராஜ மலைப்பாம்பு என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் நிகோபார் தீவுகள் மற்றும் மலேசியாவில் இந்த பாம்புகள் அதிகம் வசிக்கின்றன. இதற்கு விஷம் கிடையாது. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் வெளியே வரும்.ஒரு கிலோ எடையுடன் பிறக்கும் இந்த பாம்பு, அதிகபட்சம் 75 கிலோ எடை வரையில் வளரும். 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். தற்போது பிடிபட்டுள்ள ராஜ மலைப்பாம்பு 12 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்டது.

கடந்த அக்டோபர் மாதமும் இதேபோல் ஐ.ஐ.டி. வளாகத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு பிடிக்கப்பட்டு பாம்பு பண்ணையில் ஒப்படைக்கப்பட்டது. இது 2-வது மலைப்பாம்பு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்