ரூ.77 லட்சம் செலவில் கோடப்பமந்து கால்வாயில் தடுப்புச்சுவர்
கோடப்பமந்து கால்வாயில் ரூ.77 லட்சம் செலவில் 300 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி
கோடப்பமந்து கால்வாயில் ரூ.77 லட்சம் செலவில் 300 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோடப்பமந்து கால்வாய்
நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா வனப்பகுதியில் உற்பத்தியாகி ஊட்டி நகரின் மையப்பகுதியில் ஓடும் கோடப்பமந்து கால்வாயில் பிளாஸ்டிக் கொட்டுதல் உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக மாசடைந்து வருகிறது. ஊட்டி நகரின் ஒட்டுமொத்த கழிவுகளும் கோடப்பமந்து கால்வாயில் கலந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்தக் கால்வாயின் நீரை ஆதாரமாக கொண்டு உள்ள ஊட்டி ஏரியிலும் மாசுபாடு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஏரியைப் பாதுகாக்கும் வகையில் ஏரி பாதுகாப்புக் குழு ஒன்று அமைத்து சுற்றுலா வளர்ச்சித்துறையும் இணைந்து ரூ.66 லட்சம் செலவில் பிரமாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தடுப்புச்சுவர்
இந்தநிலையில் கால்வாயின் நடுவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் கசிந்து ஏரி நீர் அசுத்தம் அடைந்து வந்தது. இதனால் ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கோடப்பமந்து கால்வாயை தூர்வாறும் பணிகள் மற்றும் கால்வாயில் உள்ள பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி ஆழ்துழை துவாரங்கள் கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளுக்காக ஏ.டி.சி., டவுன் பஸ் நிலையம், பஸ் நிலைய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கால்வாயின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் பொருத்தப்படாமல் திறந்த நிலையில் காட்சியளித்தது. இதனால் கால்வாய்க்குள் குப்பைகள் எரியப்பட்டன மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்த நிலையில் சென்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, அந்த பகுதியில் மீண்டும் தடுப்புச் சுவர் கட்ட மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.77 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து மாவட்ட பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார் மேற்பார்வையில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
ஊட்டி ரெயில் நிலையம் அருகேயுள்ள பகுதியில் இருந்து ஏடிசி., வரை பல இடங்களிலும் கால்வாயின் ஓரத்தில் 7 அடி உயரத்திற்கு சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கான்கீரிட் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த 10 நாட்களில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.