தொன்மையான 146 கோவில்களில் திருப்பணி: மாநில வல்லுனர் குழு ஒப்புதல்
தொன்மையான 146 கோவில்களில் திருப்பணி நடத்துவதற்கு மாநில வல்லுனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.;
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் திருப்பணிகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொரு வாரமும் வல்லுனர்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், சென்னை நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று மாநில அளவிலான 52-வது வல்லுனர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் நடந்தது. கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்வது குறித்து வல்லுனர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, திருவையாறு ஜனமுக்தீஸ்வரர் கோவில், சுவாமிமலை காசி விஸ்வநாதர் கோவில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சொக்கலிங்க சுவாமி கோவில், தென்காசி காளியம்மன் கோவில், திருவெறும்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட 146 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாநில அளவிலான வல்லுனர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 146 கோவில்களிலும் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், கட்டமைப்பு வல்லுனர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுனர் வசந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.