மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
ஊனம் என்பது உடலில் இல்லை. மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
21 வகையானவர்கள்
கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.
2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.
அரசு திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.
அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-
பரிதாபமான பார்வையில்...
விழுப்புரம் பூங்குணம் அண்ணாமலை:-
கடைநிலை மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற்று வர வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறது மாற்றுத்திறனாளிகள் சமுதாயம். அரசு அலுவலகங்கள், பொது கழிவறைகள், ரெயில் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் செல்வதற்குகூட முடியாத தடையற்ற சூழல்தான் எங்களுக்கு உள்ளது. அனைத்து இடங்களிலும் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்களுடைய ஆலோசனைகளையும் உறுதிப்படுத்துங்கள் என்று கேட்க வேண்டிய நிலைமை உள்ளது. எங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் தற்போதைய அரசு சாலையோர கடைகள், அரசு கட்டிடங்களில் பாலகம் வைப்பதற்கு முன்வைப்புத்தொகை, வாடகையில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசாணையாக கொண்டு வந்தாலும் நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள், அதை செயல்படுத்த தயங்குகிறார்கள். அரசாணையை செயல்படுத்த தனிக்குழு அமைத்து மேற்பார்வையிட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழாவாக மட்டுமே கொண்டாடி வருகிறார்களே தவிர சமுதாயத்தில் நாங்கள் இன்னும் மறுமலர்ச்சி அடையவில்லை. எங்களை அங்கீகரிக்கவோ, உரிமைகளை உறுதிப்படுத்தவோ இல்லை. பாவம் என்ற பரிதாபமான பார்வையில்தான் இன்னும் வாழ்ந்து வருகிறோம்.
இட ஒதுக்கீடு
உலகலாம்பூண்டி தமிழரசி:-
அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதன்படி உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் உரிய முறையில் சென்றடையவும் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கட்டாயமாக இருக்க வேண்டும். அதுபோல் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாக்கும் வண்ணம் மாற்றுத்திறனாளி ஆணையரை மாற்றுத்திறனாளிகளை கொண்டே அப்பணியிடம் நிரப்பப்பட்டு முழு அதிகாரத்துடன் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். அரசு வழங்கும் அனைத்து திட்டங்களிலும் எங்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையையும் உயர்த்தி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். எங்களது அனைத்து குடும்பங்களையும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்க்க வேண்டும். அனைத்து அரசு, தனியார் கட்டிடங்களிலும் நாங்கள் சிரமமின்றி சென்றுவர சாய்வுதளம் அமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் அரசு விரைந்து நிறைவேற்றினால்தான் எங்களுடைய வாழ்வில் ஏற்றம் காண முடியும்.
கட்டிடங்களில் சாய்வுதளம்
செஞ்சி ரமேஷ்:-
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய திட்டங்களை வகுத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ஒரு சில இடங்களில் செல்லும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான இடங்கள் தடையற்ற சூழலாக இருக்கும்பட்சத்தில் அந்த இடத்தில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்ததாக கருதுகிறோம். தற்போதுள்ள விலைவாசி உயர்வில் அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கினால் எங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும். அனைத்து கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சென்று வருவதற்கு சாய்வுதளம் அமைக்க வேண்டும்.
ஒளியேற்ற வேண்டும்
திண்டிவனம் ராஜ்குமார்:-
நான் என்னுடைய சொந்த முயற்சியில் கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். அரசு எனக்கு 3 சக்கர வாகனம் வழங்கி உள்ளதால் ஓரளவுக்கு என்னுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. எனக்கு அரசு மூலமாக வியாபாரத்துக்கு கடனுதவி கிடைத்துள்ளது. இதனால் எனது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. என்னைப்போன்றவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை அல்லது இலவச வீடு வழங்கி எங்களுடைய வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
இலவசமாக வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகி கார்த்திக்:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வருகிறார்கள். உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு அந்த தொகை கிடைக்கவில்லை. அதேபோல் பெட்ரோல் ஸ்கூட்டரும் பெரும்பாலான மாற்றத்திறனாளிகளுக்கு கிடைக்கவில்லை. பெட்ரோல் ஸ்கூட்டரை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடுமையாக ஊனமடைந்தவர்களுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சிறு தொழில் கடன் பெற வங்கியில் விண்ணப்பித்தால் வங்கிகள் கடன் தராமல் அலைக்கழித்து வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டு முழுவதும் வேலை
அரியபெருமானூர் வக்கீல் இளையராஜா:-
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும் 3 சக்கர வாகனம் மற்றும் செவி திறன் கேட்கும் கருவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் பலரும் வேலைக்கு செல்கின்றனர். மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல் அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை உள்ளது. வரும் காலங்களில் இலவச பயண அட்டை வழங்க வேண்டும். படித்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 4 சதவீத வேலைவாய்ப்பை 7 சதவீதமாக மாற்றி வேலைவாய்ப்பை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள முன் வரும் மாற்றுத் திறனாளிகள் அல்லாத நபருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுமுறை நாட்களை தவிர ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.